காவேரிபட்டிணத்தில் உள்ள தனது வீட்டில், முன்னாள் அமைச்சர் .கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார்.

ஏற்கெனவே சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் இவர் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 25ந்தேதி பேட்டியின்போது, சசிகலாவின் கணவர்  நடராஜனும், அதிமுக எம்.பி.யான தம்பிதுரையும் கட்சியை சீரழிக்கப் பார்க்கிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும்  அதிமுக எங்கள் கட்சி என கூறுவதை நடராஜன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அதையடுத்து சசிகலா ஆதரவு அதிமுக அமைச்சர்கள் அவருக்கு பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் தஞ்சாவூரில்ந டைபெற்ற பொங்கல் விழாவின்போது அதிமுகவை உடையாமல் காப்பாற்றியதில் தங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்றும், நாங்கள்  குடும்ப அரசியல்தான் செய்வோம் என பகிரங்கமாக நடராஜன் பேசினார்.

நடராஜனின் இந்த பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது..

நடராஜனின் இந்த பேச்சுக்கு  முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சசிகலா சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கிறார். முதல்வராக பதவி ஏற்க மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு இன்று அதிரடியாக கூறியுள்ள நிலையில் கே.பி.முனுசாமியின் இன்றைய பேட்டி பரபரப்பாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.