சிட்னி: மூன்றாவது டெஸ்ட்டின்போது, இந்திய வீரர்கள் சிலர், ஆஸ்திரேலிய ரசிகர்களால் நிறவெறி வசைபாடலுக்கு உள்ளானபோது, இந்திய அணிக்கு முன்சென்று ஆதரவு தெரிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னின் செயலைப் பாராட்டியுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.
முகமது சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் மீது நிறவெறி வசைபாடல்கள் நிகழ்ந்ததையடுத்து, நடுவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இந்திய வீரர்கள் அனைவரும் மைதானத்தில் ஒருசேர நின்று கொண்டிருந்தனர். அப்போது, பேட்டிங் செய்து கொண்டிருந்த டிம் பெய்னேவும், இந்திய வீரர்களிடம் போய் நின்றுகொண்டார்.
இந்திய வீரர்களிடம் ஏதோ பேசினார். நடுவர் மற்றும் இந்திய வீரர்களுடன் சேர்ந்து பார்வையாளர்கள் பக்கமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்திய வீரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைந்த அவரின் செயலை, ஒரு சிறந்த நடவடிக்கை என்று பாராட்டியுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். மேலும், டிம் பெய்னேவின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
“ஆஸ்திரேலிய அணியினராகிய நாங்கள், நிறவெறி உணர்வுக்கு எதிரானவர்கள் என்பதை இந்திய அணியினர் உணர வேண்டும் என்பதை வெளிப்படுத்த விரும்பினேன்” என்றுள்ளார் டிம் பெய்னே.