டெல்லி: உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர்.  அவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் பதவி பிரமாணம் செய்து வசந்தார். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில்  நீதிபதிகள் எண்ணிக்கை 34ஆக உயர்ந்து, முழு பலத்தை பெற்றுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த திங்கட்கிழமை கூடி மூன்று மாநில உயர்நீதிமன்றங்களில் இருந்து 2 தலைமை நீதிபதிகள் மற்றும் ஒரு மூத்த நீதிபதியை உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.  இதற்கு மத்திய  சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கிய நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்வு அதற்கான ஆணை பிறப்பித்தார்.

மூன்று நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து,   கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் மற்றும் மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஏ.எஸ் சந்துர்கர்  ஆகிய  மூன்று நீதிபதிகளும் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது. உச்சநீதிமன்றதம் அதன் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை எட்டி உள்ளது.