புதுடெல்லி:

சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரிக்கு, அவரது ஓய்வுக்குப் பிறகு காமன்வெல்த் செயலக நடுவர் தீர்ப்பாய தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது.

 

இந்த தகவலை ‘தி பிரிண்ட்’ இணையம் வெளியிட்டுள்ளது. அந்த இணையத்தின் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் மட்டக்குழுவில் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி மற்றும் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் இடம் பெற்றனர்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையின் படி, சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பிரதமர் மோடியும், நீதிபதி சிக்ரியும் ஆதரவு தெரிவித்தனர். எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எதிர்ப்பு தெரிவித்தார்.

மெஜாரிட்டி ஆதரவின் அடிப்படையில் அலோக் வர்மா பதவி பறிக்கப்பட்டது.

இது பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், மற்றொரு சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் இருக்கும் நீதிபதி ஏ.கே.சிக்ரியின் பதவிக் காலம் மார்ச் 6-ம் தேதி முடிகிறது.
இதனையடுத்து, அவரை லண்டனில் உள்ள காமென்வெல்த் செயலக நடுவர் தீர்ப்பாய தலைவர் மற்றும் உறுப்பினராக நியமிக்க கடந்த மாதமே மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தப் பதவியில் சிக்ரி நியமிக்கப்பட்டால் 4 ஆண்டுகள் தொடர்வார். அதன்பிறகு ஒரு முறை நீட்டிப்பு வழங்க முடியும்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.