டில்லி,
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மீது, நீதிபதி கர்ணன் ஊழல் புகார் கூறி மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் கடிதம் எழுதினார். அதைத்தொடர்ந்து அவர் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
இதுகுறித்த விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் நீதிபதி கர்ணன் ஆஜராக மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று நீதிபதி கர்ணன் ஆஜரானார்.
அதைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், கர்ணன் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளாரா அல்லது இது பற்றி தானாக அல்லது வக்கீல் வைத்து வாதாட விரும்புகின்றாரா என கேள்வி எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்டு பேசிய மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், இந்த வழக்கில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கர்ணன் அனைத்தையும் தெரிந்தே செய்துள்ளார் என குற்றம்சாட்டினார்.
ஆனால், அதை எற்க மறுத்த உச்சநீதி மன்ற நீதிபதிகள், நீதிபதி கர்னனின் மனநிலை தெளிவாக இல்லை என நாங்கள் கருதுகிறோம். அவர் என்ன செய்தார் என்பதை புரிந்து கொள்ள முடியாதவ ராக உள்ளார் என்றனர்.
அப்போது நீதிபதி கர்ணன் கூறுகையில், எனது பணியை செய்ய நீங்கள் அனுமதித்தால், எனது இயல்பான நிலைக்கு திரும்புவேன் என்றும், அனுமதி தரவில்லை என்றால் அடுத்த முறை ஆஜராக மாட்டேன். என்னை சிறைக்கு அனுப்பிக்கொள்ளுங்கள் எனக்கூறினார்.
நீதிபதி கர்ணனின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்க தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.