சென்னை: பணி நியமனம் தொடர்பான முறைகேடு புகாரில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவிற்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்த சூரப்பா மீது, பணி நியமனத்தில் ரூ.280 கோடி அளவில் ஊழல் புகார்கள் எழுந்தது. இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழுவை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டது. இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே 80 சதவிகித விசாரணைகள் முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சூரப்பாவுக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சூரப்பா மீதான விசாரண அறிவிப்புக்கு ஆளுநர் பன்வாரிலாலும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், நீதியரசர் கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம், சூரப்பாவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.