புதுடில்லி:
முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.
கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் நியமனம் செய்ய வேண்டிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவை பிரதமர் தலைமையிலான குழு முடிவு செய்யும்.
இந்தக்குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி , சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் அடங்குவர். இந்த அமைப்புக்கு தலைவரை நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி பினாகி சந்திரா கோஷ் உள்பட 9 பேரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.
அவர்களின் விவரம் வருமாறு:
நீதித்துறையிலிருந்து நீதிபதி திலிப் போஷலே, நீதிபதி பிரதீப் குமார் மொகந்தி, நீதிபதி அபிலாஷா குமாரி, நீதிபதி அஜய் குமார் திரிபாதி.
நீதித்துறை அல்லாத தினேஷ்குமார் ஜெயின், தமிழகத்தைச் சேர்ந்த 1980-ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா சுந்தரம். இவர் ஐஏஎஸ் அதிகாரி ராமசுந்தரத்தின் மனைவி. மகேந்தர் சிங், இந்தர்ஜித் பிரசாத் கவுதம் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந் நியமித்தார்.
உயர் பதவியில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, மத்தியில் லோக்பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் ஆயுக்த அமைப்பையும் ஏற்படுத்துவதற்கான சட்டம், நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்படுபவர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ இருந்திருக்க வேண்டும். லோக்பால் ஆணையத்தில் 8 உறுப்பினர்கள் வரை இடம்பெறலாம். அதில் 4 உறுப்பினர்கள் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேராவது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது வரையில் ஆகும்.
லோக்பால் தலைவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும். லோக்பால் உறுப்பினருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.