சென்னை:
ஊழலுக்கு எதிரான சட்ட நோக்கத்தை எதிரொலிக்கும் வகையில் நீதிமன்ற தீர்ப்பு இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அமித்வராய் கூறியுள்ளார்.
தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பலவித சட்ட நடவடிக்கைகளைக் கடந்து வந்தது. இந்த நிலையில் கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றம், அவர்கள் நால்வரையும் குற்றவாளிகள் என அறிவித்து தண்டனையும் வழங்கியது.
குற்றவாளிகள் தரப்பில், கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கு இவர்களுக்கு விடுதலை கிடைத்தது.
இதையடுத்து கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதன் தீர்ப்பு இன்று வெளியானது.
மரணமடைந்துவிட்டதால் ஜெயலலிதா, தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மீதமுளள குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றத்தில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராத்தை அவரது சொத்துக்களில் இருந்து ஈடுகட்டவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை வழங்கிய இரு நீதிபதிகளில் ஒருவர், அமித்வராய். தீர்ப்பு குறித்து இவர் தற்போது சொல்லியிருப்பது என்ன தெரியுமா,
”ஊழலுக்கு எதிரான சட்ட நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் இவர்.