சென்னை: பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன. தேர்வுகள் அனைத்து தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு மெல்ல தளர்த்தப்பட்டு வரும் நிலையில் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் பள்ளித் தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந் நிலையில் மார்ச் 24ம் தேதி நடைபெற இருந்த 12ம் வகுப்பு தேர்வை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மார்ச் 24 ஆம் தேதி தேர்வு எழுத முடியாத பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இருப்பினும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.
ஹால்டிக்கெட்டுகளை வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை அவரவர் பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel