டெல்லி:

நீதித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று உ ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்தார்.

மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது 3 நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்சுக்கு தலைமை வகித்த தலைமை நீதிபதி கேஹர் கூறுகையில், ‘‘மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் உயர்த்த சமீபத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான நடைமுறை உடன்படிக்கைக்கு உச்சநீதிமன்ற ஆலோசனை குழு அனுமதி வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் அதிகளவில் உள்ளது. ஆனால் இதை நிரப்ப கடுமையான நடைமுறையை பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது. எனினும் முதலில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அதுவரை உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்காது’’ என்றார்.

கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் வழங்கப்பட்ட என்ஜேஏசி தீர்ப்பை தொடர்ந்து நீதிபதிகள் நியமன உடன்படிக்கை கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது நடைமுறை உடன்படிக்கைக்கு உச்சநீதிமன்ற ஆலோசனை குழு அனுமதி வழங்கியுள்ளது என்று தலைமை நீதிபதி முதன் முறையாக திறந்த நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பது தொடர்பான மற்றொரு மனுவை குழு பரிசீலனைக்கு அனுப்பி உத்தரவிட்ட தலைமை நீதிபதி கேஹர் கூறுகையில்,‘‘ இது தொடர்பாக ஒரு குழு தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அந்த குழுவின் பரிசீலனைக்கு இந்த மனு அனுப்பப்படுகிறது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண உயர்நீதிமன்றங்கள் மூலம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண அனைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்து விவாதிக்க வேண்டும்’’ என்றார்.