சென்னை: தமிழக பால்வளத்துறைஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைத்து தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.  சர்ச்சைக்கு பெயர்போன இவர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். அந்த மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் உள்ளார். இவர் மீது மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த 2014ம்ஆண்டு, உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தார். அவரது மனுவில்,  ‘ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் அருகே தேவதானத்தில் ரூ.74 லட்சத்துக்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தின் அசல் மதிப்பு ரூ.6 கோடி. தவிர திருத்தங்கலில் 2 வீட்டுமனைகளும் நிலமும் வாங்கியுள்ளார். தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து இப்படி வருமானத்துக்கு அதிகமாகப் பல கோடி ரூபாய்க்குச் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ள இவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று  கூறி இருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்து. இதையடுதது, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில்,  முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது. ஆனால் வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, மீண்டும் 2018ம் ஆண்டு வழக்கை விசாரிக்க மகேந்திரன் தரப்பில் மீண்டும் நினைவூட்டப்பட்டது.

இந்த வழக்கை  நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் இரு நீதிபதிகளும்  மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிந்து ஆளுநரிடம் உரிய அனுமதி பெற்று விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். ஆனால் நீதிபதி ஹேமலதா, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிய முகாந்திரம் இல்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அமர்வின் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தால் மகேந்திரன் தொடர்ந்த வழக்கு, 3வது நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி  தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.