சென்னை:  திருப்பரங்குன்றம் மலை மீதான சர்ச்சையில், இந்து முன்னணி போராட்டத்துக்கு அனுமதி வழங்கிய  நீதிபதியின் தீர்ப்பு அயோக்கியதனம் என  மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம் செய்ததை சுட்டிக்காட்டி,  திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற இந்து முன்னணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு அனுமதி வழங்கிய நீதிபதியின் தீர்ப்பு அயோக்கியதனம் என்றும், ஓய்வு பெற்றபின் ஆளுநர் பதவியை எதிர்பார்த்து தீர்ப்பு வழங்கினார் என்ற பழி சுமத்தி கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் பேசி இருப்பது சர்ச்சையாகி உள்ளது. இதை சுட்டிக்காட்டி,  நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன்மீது  நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் குடியரசு தலைவர் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்,” என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவ திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் மத நல்லிணக்க மாநாடு நடத்தி, அதில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசியது, தீர்மானம் நிறைவேற்றியது அனைத்தும் நீதிமன்ற அவமதிப்பு என்றும்,  மதநல்லிணக்க மாநாடு என்ற பெயரில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், மீண்டும் பதற்றத்தை உண்டாக்கும் வகையிலும், மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், இந்து அமைப்பினர்களுக்கும் மிரட்டல் விடுக்கும் வகையிலும், நீதிபதிகளையும் விமர்சனம் செய்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்ட மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் மற்றும் மாநாட்டை நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  இந்து அமைப்புகள் கூறியுள்ள நிலையில்,  இந்து முன்னணி சார்பில், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 9-ம் தேதி மதுரையில் மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கூட்டம் நடந்துள்ளது. அதில் பேசிய பலரும் மதக் கலவரத்தை தூண்டும் விதத்திலும் சட்ட விரோதமாகவும் பேசிய காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இக்கூட்டத்தில் பேசிய கம்யூனிஸ்ட் எம்.பி‌. சு.வெங்கடேசன் திருப்பரங்குன்றம் மலை காக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த நீதிபதியின் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்து அதாவது அவர் ஆளுநர் பதவி கிடைக்கும் என்பதற்காக தீர்ப்பு வழங்கியுள்ளார் என்ற வகையில் அநாகரிகமாக பேசியுள்ளார்.

நீதிபதியின் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கும் இதே எம்.பி. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் தமிழர் வரலாற்றை பெருமைப்படுத்தும் விதமாக பிரதமர் மோடியின் பதவியேற்பு சமயத்தில் ஆதீனங்கள் செங்கோல் வழங்கிய போது தமிழ் மன்னர்களை இழிவுப்படுத்தினார். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என திமுக எம்.எல்.ஏ. அப்துல் சமது கூறினார். முருகனின் முதல்படைவீடான திருப்பரங்குன்றம் மலை முஸ்லிம்களின் சொத்து வக்பு வாரியத்துக்கு சொந்தம் என ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி கூறினார்.

இவை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பது தெரிந்தும் தமிழக அரசும், திருப்பரங்குன்றம் மலை கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும், எம்.பி. வெங்கடேசனும் வாயை திறக்கவில்லை.

முஸ்லிம் அமைப்பினர் புனிதமான மலைமீது அசைவ உணவை எடுத்து சென்று சாப்பிட்டனர். அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். அப்போதும் காவல்துறை அரசு நிர்வாகம் அவர்களுக்கு அனுசரித்து போனது. இந்நிலையில் முருக பக்தர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி கோயிலை காக்க இந்து முன்னணி சார்பில் ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்ததை காவல்துறை நிராகரித்தது.

அரசு நிர்வாகம் மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை போட்டது. ஆனால் அதே அரசு நிர்வாகம் மார்ச் 3-ம் தேதி திமுக ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தது. இவற்றை கவனத்தில் கொண்டே நீதிமன்றம் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு மதுரையில் அனுமதி அளித்தது.

நீதிபதியின் தீர்ப்பு அயோக்கியதனம் என்றும், ஓய்வுபெற்றபின் ஆளுனர் பதவியை எதிர்பார்த்து தீர்ப்பு வழங்கினார் என்ற பழி சுமத்தி கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. இவரது நடவடிக்கை மிகவும் கீழ்த்தரமான செயல். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் குடியரசு தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை மீதான வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் மற்றும் அந்தக் கூட்டத்தில் பேசிய பலரின் கருத்துக்கள் நீதிபதிகளை, அதிகாரிகளை மிரட்டும் தொனியில் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் இந்த வழக்கு நடந்தால் அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது என சந்தேகிக்கிறோம்.

இத்தகைய சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல திருப்பரங்குன்றம் விஷயத்தை திட்டமிட்டு பிரச்சினையாக உருவாக்கியது யார்? இந்த சதிக்கு பின்னணி என்ன என்பதை சிபிஐ அல்லது மத்திய புலனாய்வு துறை மூலம் விசாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு  கூறியுள்ளார்.