சாத்தான்குளம்: சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதிபதியை காவல்துறையினர் ஒருமையில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மரணம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்து வருகிறது. அதற்காக கோவில்பட்டி கீழமை நீதிமன்ற நீதிபதி, சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு விசாரிக்க சென்றார்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் டி.குமார், துணை கண்காணிப்பாளர் சி.பிரதாபன் முன்னிலையில் மற்ற காவலர்கள் அவரை பணி செய்ய தடுத்தாக அந்த நீதிபதி புகார் அளித்துள்ளார். மேலும் காவலர்கள் நீதிபதி கேட்ட ஆவணங்களை தர மறுத்ததாகவும், அவரை தொடர்ந்து செல்போனில் படம் எடுத்ததாகவும் கூறி உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மகாராஜன் என்ற கான்ஸ்டபிள் நீதிபதியிடம் தரக்குறைவான வார்த்தையை உபயோகித்து, ஒருமையில் பேசியதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த குறிப்பிட்ட நீதிபதி அளித்த புகாரின்பேரில் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் டி.குமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் சி.பிரதாபன் மற்றும் கான்ஸ்டபிள் மகாராஜன் உள்ளிட்டோர் நாளை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.