ஹைதராபாத்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நீதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தெலுங்கானாவில் ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் பிரசாத். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக, வழக்கு பதியுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஊழல் தடுப்பு பிரிவின் கீழ், அவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்றது.
அதே நேரத்தில் காடியன்நரன், இசத்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அவரது வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஹைதராபாத்தில் 4 இடங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 இடங்களிலும் உள்ள அவரது உறிவினர்கள், உதவியாளர்கள் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: சந்தை மதிப்பில், 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் அவர் குவித்திருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர்.
கைது செய்யப்பட்ட நீதிபதி பிரசாத்,14வது கூடுதல் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதால் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார்.

தெலுங்கானா மாநிலத்தில், ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் நீதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது புதிதல்ல. ஏற்கனவே, 4 நீதிபதிகள் இவர் போன்றே கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
[youtube-feed feed=1]