திருவனந்தபுரம்:

பரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அழைத்துச் சென்ற கேரள அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறுகிறது. இதை படம் எடுத்த கேரள தொலைக்காட்சி ஊடகங்களின் காமிரா மேன்கள், செய்தியாளர்கள் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார்கள். இது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் காமிரா வுமேன் ஷைலஜா (கைரளி டிவி)

சபரிமலை அய்யப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் எச்சரிக்கையையும் மீறி கேரள மாநில அரசு மப்டி போலீசார் உதவியுடன்  2 பெண்களை கோவில் பின்வாசல் வழியாக சபரிமலை சன்னி தானத்திற்குள் அழைத்து சென்றனர். நேற்று அதிகாலை 1 மணி முதல் 3 மணிக்குள் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவில் நடை சாற்றப்பட்டு பரிகாரப் பூஜை செய்யப்பட்டு மீண்டும் நடை திறக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசுக்கு  பாஜக, காங்கிரஸ் உள்பட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பல இடங்களில் போராட்டமும் நடைபெற்றுவருகிறது. கேரளாவில் பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் தொடர்பாக இன்று முழுஅடைப்பு போராட்டம் நடை பெற்று வருகிறது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.  போராட்டக்காரர்கள் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டன.

திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலக அலுவலகத்தை பாஜக உள்பட இந்து அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை படம் பிடித்து வரும் ஊடகவியலாளர்கள பலர் போராட்டக்கார்களால் தாக்கப்பட்டு வருகின்றனர்.

கேரளாவில் பிரபலமான கைரளி டிவி மற்றும் ஆசியா நெட் டிவியின் செய்தியாளர்கள் போராட்ட காரர்களால் தாக்கப்பட்டுள்ளது. இது செய்தியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசியா நெட் டிவி காமிரா மேன் பிஜு போராட்டத்தை படம் எடுத்துக்கொண்டிருந்தபோது பாஜகவை சேர்ந்த  போராட்டக்கார்களால் தாக்கப்பட்டார்.

அதுபோல கைரளி டிவியை சேர்ந்த காமிரா வுமன்  சைலஜா பாத்திமா என்பவரும் போராட்டக் காரர்களால் தாக்குதலுக்கு ஆளானார். இருந்தாலும் அவர் வலியை பொறுத்துக்கொண்டு தொடர்ந்த போராட்டக்காரர்களின் வன்முறையை படம் பிடித்து வந்தார். அவரின் தைரியமான நடவடிக்கை பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள விவகாரம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்கள தாக்குப்படுவதற்கு பத்திரிகையாளர் சங்ககங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் , சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு, இதை நிறை வேற்றியுள்ளோம் என்றும்,  சபரிமலையை போர்க்களமாக்க சில இந்து அமைப்புகள் முயற்சிப்பதாகவும்  குற்றம்சாட்டி உள்ளார்.