சென்னை:
மாநிலம் முழுதும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு மரணங்களும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், டெங்கு விழிப்புணர்வு என்ற பெயரில் உள்ளாட்சி அமைப்புகள் 300 கோடி ரூபாய் அளவில் ஊழல் செய்துள்ளதாக மக்கள் செய்தி மையத்தின் ஆசிரியர் அன்பழகன் அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவரிடம் பேசினோம். அவர் தெரிவித்ததாவது:
“டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பெயரில் தமிழகம் முழுதும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி என உள்ளாட்சி அமைப்புகளில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் சுருட்டியிருக்கிறார்கள்.
அதாவது டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பேனர்கள், ப்ளக்ஸ்கள், நோட்டீஸ்கள் அச்சடித்ததாக சொல்லி இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற பணிகளே நடைபெறவில்லை.
இப்படி கொள்ளை நடந்த சில உள்ளாட்சி அமைப்புகள்…
தாம்பரம் நகராட்சியில் 2016 ஜனவரி முதல் 2016 நவம்பர் வரை ரூ30இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு போலி பில் போடப்பட்டுள்ளது.
அதேபோல் திருவேற்காடு நகராட்சியில் சுமார் 27 லட்ச ரூபாய், , திருப்போரூர் பேருராட்சியில் சுமார் 5 இலட்ச ரூபாய், மாமல்லபுரம் பேரூராட்சியில் ரூ 6 இலட்சம், பூந்தமல்லி நகராட்சியில் ரூ 30இலட்சம் என்று உள்ளாட்சி அமைப்புகளில் 2016ம் ஆண்டு மட்டும் ரூ100 கோடியும் 2017ம் ஆண்டில் ரூ 70 கோடியும் போலி பில் போடப்பட்டுள்ளது .
மேலும் ஆவடி நகராட்சியில் ரூ 27 லட்சம் , பல்லவரம் நகராட்சியில் ரூ 21 லட்சம் இப்படி இல்லாத பேனர்கள், ப்ளக்ஸ்களுக்கு ஒதுக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படி தமிழகம் முழுதும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் 2016ல் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு பெரும் ஊழல் நடந்திருக்கிறது. தவிர இன்னும் தமிழகம் முழதும் 12,624 கிராம பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன. இவற்றில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.
கோவில்பட்டியில், “கோவில்பட்டி ஸ்மால் இன்டஸ்ரிடியல் கோ.ஆப். சொசைட்டி” என்று இயங்குகிறது. இங்கிருந்து 525 பேரூராட்சிகளுக்கு தலா 35 முதல் 60000 ஆயிரம் ரூபாய்க்கு டெங்கு விழிப்புணர்வுக்கா ப்ளக்ஸ் பேனர் அனுப்பியதாக பில் போட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இப்படி அனுப்பப்படவில்லை.
மேற்கண்ட ஊழல் எல்லாமே டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு என்ற பெயரில் ப்ளக்ஸ், போர்டு வைத்ததாக கணக்கு காட்டப்பட்டவைதான்.
இவை தவிர குப்பை அள்ளுதல் போன்ற இதர பணிகள் பல உள்ளன. இவை எந்த அளவுக்கு நடந்தன அல்லது நடந்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டன என்ற விவரம் தெரியவில்லை!” என்று அன்பழகன் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.