சென்னை
தமிழக அரசின் சுகாதார காப்பீட்டுத் திட்ட அட்டை போல ஒரு அட்டையைப் போலியாகத் தயாரித்து கரூர் பாஜகவினர் பணம் வசூல் செய்வதாக காங்கிரஸ் எம் பி ஜோதிமணி குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழகத்தில் அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு நலத் திட்டங்கள் முந்தைய திமுக ஆட்சியில் தொடரப்பட்டு அதன்பிறகு அதிமுக ஆட்சியில் தொடர்ந்து வருகிறது. அவற்றில் சுகாதார காப்பீட்டுத் திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டம் திமுக ஆட்சியின் போது கலைஞர் காப்பிட்டு திட்டம் என்னும் பெயரில் தொடங்கப்பட்டு அதிமுக ஆட்சியில் அது அம்மா மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என மாற்றப்பட்டது.
இந்த திட்ட அட்டையை பாஜக தலைவர்களின் படங்களுடன் போலியாக அச்சடித்து கரூர் மாவட்ட மக்களுக்கு அளித்து வருவதாகக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டி உள்ளார். மேலும் கிராம மக்களிடம் இருந்து இந்த காப்பீட்டுக்காக பாஜகவினர் பண வசூல் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் உண்மையான அட்டை மற்றும் பாஜகவினர் அளிக்கும் போலி அட்டையையும் காட்சிப் படுத்தி உள்ளார்.
இது குறித்து ஜோதிமணி, “தமிழக அரசால் திமுக காலத்தில் தொடங்கப்பட்டு அதன் பிறகு அதிமுக அரசால் தொடரப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை மூலம் மட்டுமே மக்கள் பயனடைய முடியும். ஆனால் பாஜகவினர் தங்கள் தலைவர்கள் படத்துடன் ஒரு போலி அட்டையை அச்சடித்து கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மக்களுக்கு அளித்து வருகின்றனர். இந்த போலி அட்டைக்காக ஏழை எளிய மக்களிடம் இருந்து பாஜகவினர் ரூ.100 முதல் ரூ.200 வரை பணம் வசூலித்துள்ளனர்.
இந்த அட்டையில் உள்ள கரூர் மாவட்ட பாஜக தலைவர்கள் இந்த அட்டைகளை நேரடியாகக் கரூரில் பல இடங்களில் வழங்கி வருகின்றனர். இந்த ஊழல் நிச்சயமாக பாஜக தலைவர்களுக்குத் தெரிந்து தான் நடந்திருக்கும். பாஜகவினர் மக்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்கள் என்றாலும் தற்போதைய கொரோனா பாதிப்பு காலத்தில் இரக்கமற்று மக்களிடம் பணம் பறிக்கும் பணியைச் செய்து வருகின்றனர்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் என்னிடம் இது குறித்துத் தெரிவித்ததுடன் இந்த அட்டை செல்லுபடியாகுமா எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் மக்களிடம் இருந்து பாஜகவினர் ரேஷன் அட்டைகளையும் இந்த அட்டை வழங்குவதற்காக பெற்றுள்ளதாகவும் கூறி உள்ளனர்” என தெரிவித்துள்ளார். இந்த தகவல் தமிழக மக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.