சென்னை: தனது 100வது டெஸ்ட் போட்டியில், இரட்டை சதமடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் புரிந்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.
இந்தியாவிற்கு எதிராக தற்போது ஜோ ரூட் பங்கேற்கும் சென்னை டெஸ்ட் போட்டியானது, அவருக்கு 100வது போட்டியாகும். இதில்தான் இந்த சாதனையை செய்துள்ளார் அவர்.
இதற்கு முன்னதாக, கடந்த 2005ம் ஆண்டில், இந்தியாவின் பெங்களூருவில் தனது 100வது டெஸ்ட் போட்டியை, இந்தியாவுக்கு எதிராக ஆடிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் அடித்த 184 ரன்கள்தான், 100வது டெஸ்ட் போட்டியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது அந்த சாதனையை சிறப்பான முறையில் முறியடித்துள்ளார் ஜோ ரூட்.
தற்போது 30 வயதாகும் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் 200 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றவர் என்ற சாதனையையும் முறியடிப்பார் என்று கூறப்படுகிறது. இவர், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 15வது இங்கிலாந்து வீரராவார் மற்றும் 100வது டெஸ்ட்டில் சதமடித்த மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற பெயரையும் பெறுகிறார்.