வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகள் அனைத்தையும், இந்தாண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதிக்குள் திரும்ப பெறுவதற்கு, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டை கோபுர தாக்குதலையடுத்து, ஆப்கன் மீது, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் தொடுத்த யுத்தம், இந்தாண்டு செப்டம்பர் 11ம் தேதியுடன், 20 ஆண்டுகளை நிறைவுசெய்யவுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது, பிற நாடுகளின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வேலையை நம் படை வீரர்கள் செய்ய முடியாது எனக் கூறி, படைகள் விலக்கலை அறிவித்தார் முந்தைய அதிபர் டிரம்ப். அதற்கான கெடுவாக மே முதல் தேதியை நிர்ணயித்திருந்தார்.

மேலும், ஆப்கன் அரசு மற்றும் தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தைக்கும் ஏற்பாடு செய்தார். ஆனால் படைகளை முழுமையாக விலக்கிக்கொண்டால்தான் பேச்சுவார்த்தை என்பதில் தலிபான்கள் உறுதியாக உள்ளனர். தற்போது அதிகாரம் பைடன் வசம் மாறியிருப்பதால், படைகளைத் திரும்பப் பெறுவதில், 5 மாத தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது 2,500 அமெரிக்க வீரர்கள் ஆப்கனில் உள்ளனர். அவர்களை முழுமையாக திரும்பப் பெற்றபின், தலிபான்கள் ஆதாயமடைவார்கள் என்கின்றனர். அமெரிக்க உளவு அமைப்பின் அறிக்கையில், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் நிலத்தை தக்கவைக்க தலிபான்களுடன் போராட வேண்டியிருக்கும் எனக் கூறியுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறும்போது, அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. அப்படி தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என தலிபான்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.