வாஷிங்டன்

எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்த அபுபக்கர் அல்பக்தாதி கடந்த 2009 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.  பிறகு ஐ எஸ் தீவிரவாத இயக்க தலைவராக அபு இப்ராகிம் அல் ஹாஷிமி குறேஷி செயல்பட்டு வருகிறார்.  நேற்று இரவு சிரியா நாட்டில் பதுங்கி உள்ள ஐ எஸ் தலைவரைப் பிடிக்க அமெரிக்கப் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது.

அபு இப்ராகிம் இருந்த இடத்தைச் சுற்றி வளைத்த அமெரிக்கப்  படையினர் அவரை சரணடைய வேண்டும் என அறிவித்தனர்.    ஆனால் அபு இப்ராகிம் அமெரிக்கப் படைகளைத்  தாக்கத் தொடங்கி உள்ளார்.   அப்போது நடந்த சண்டையில் அபு இப்ராகிம் உயிர் இழந்ததாகக் கூறப்படுகிறது.    அதேவேளையில் அபு இப்ராகிம் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் அமெரிக்கப்படைகளால் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளார்.  மேலும் அவர் சிரியாவில் தமது படைகள் நடத்திய தாக்குதல் மூலம் உலகில் எங்கு தீவிரவாதம் தலை தூக்கினாலும் அதை அமெரிக்க ஒழிக்கும் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க படைகள் இந்த தாக்குதலுக்குப் பிறகு பத்திரமாக முகாமுக்கு திரும்பி விட்டதையும் ஜோ பைடன் தனது தகவலில் உறுதி செய்துள்ளார்.  இந்த தாக்குதலில் காயமடைந்த தீவிரவாதிகள் அல்லாத பொதுமக்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன எனவும் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.