ஊரடங்கு. உத்தரவு. ஊர் அடங்கிடிச்சி.. ஆனா வேலையின்மைதான் தாண்டவமாடுது.
மத்தியில் உள்ள இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலையில்லா திண்டாட்டம் நான்கு மடங்காக உயர்ந்துள்ளதாகவும், பெருநகரங்களுக்குப் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலையின்மையால் பல கிலோமீட்டர் தூரங்கள் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பும் வெகு மோசமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அதிர்ச்சி அளிக்கிறது.
நகர்ப்புறங்களில், கடந்த மார்ச் 22-ம் வாக்கில் 8.7% இருந்த இந்த வேலையின்மை, மார்ச் 29-ல் 30% உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கிறது இந்த அறிக்கையின் தரவு. இதுவே கிராமப்புறங்களில் 8.3% இருந்த வேலையின்மை 21% உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த வேலையின்மையின் சதவிகிதம் 8.4%-லிருந்து 23.8%-மாக உயர்ந்துள்ளது. இதுவே இந்த ஏப்ரல் மாதத்தில் 30.9%-மாக உயரும் அபாயமுள்ளதாக அறியப்படுகிறது.
“இந்தியாவில், மாதாந்திர சம்பளத்தினர் வெறும் 22% மட்டுமே. ஆனால் 78% பேர் தினக்கூலிகளாகவே இருக்கின்றனர். இவர்களுக்கு எப்போதும் நிரந்தரமான வருமானம் கிடையாது. மார்ச் 24-ல் மத்திய அரசு ஊரடங்கு அமல்படுத்திய உடனேயே பெருவாரியான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட அதீத முயற்சி எடுத்ததற்கு இதுவே முக்கிய காரணமாகும்” என்கிறது சர்வதேச தொழிலாளர் ஆணையம்.
மேலே சொல்லப்பட்டவை அனைத்துமே இந்த கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் சேகரிக்கப்பட்ட உண்மையான தரவுகள் ஆகும்.
இந்த கொரோனா வெறும் நோய்த் தொற்றினை மட்டும் தரவில்லை. நாம் நம்பிக்கொண்டிருக்கும் பல பொய் தரவுகளைத் தகர்த்தெரிந்து நமது நிஜமான நிலை என்ன என்பதனையும் தெள்ளத் தெளிவாகத் தெரிய வைத்து விட்டது
-லட்சுமி பிரியா