சென்னை: தமிழகத்தில், அரசு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் களின் உதவியாளர்கள் மற்றும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியின் 3வது மனைவி உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல், முறைகேடு போன்ற செயல்கள் தலைவிரித்து ஆடியது. அதுபோல அரசு வேலை வாங்கித்தருவதாக பல முன்னாள் அமைச்சர்களின் உதவியாளர்களும் மோசடி செய்ததாக புகார்களும் எழுந்தன. இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதன்படி, தமிழகம் முழுவதும் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர் பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பரிதி இளம் வழுதியின் 3வது மனைவி ராணி எலிசபெத், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனின் உதவியாளரான தஞ்சையை சேர்ந்த சேஷாத்திரி, தலைமை செயலக ஊழியர் கண்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயரில் மோசடியில் ஈடுபட்ட ஹரிநாத் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.