டில்லி

நேற்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

 

நேற்று பாராளுமன்ற குளிர்காலத் தொடர் ஆரம்ப தினத்தை ஒட்டி பாராளுமன்றத்தை முற்றுகை இட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.   அப்போது அவர்கள் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  தடையை மீறிச் செல்ல முயன்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் கடும் தாக்குதல்கள் நடத்தி உள்ளனர்.

இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.  ஆசிரியர்கள் சார்பில், “இந்த தாக்குதலில் பார்வையற்ற மற்றும் ஊனமுற்ற மாணவர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.  மாணவர்களிடையே அமைதியைக் காக்க உடன் சென்ற ஆசிரியர்களும் காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர்.   தாக்க வந்த காவல்துறையினரிடம் தங்கள் ஆசிரியர் அடையாளத்தைக் காட்டியும் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

காயம் பட்டோருக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் அளிக்கப்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்குப்  பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.  இதன் மூலம் அவருடைய நிர்வாகம் சரியில்லை என்பது புலனாகிறது  எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில் டில்லி காவல்துறையினர் தாங்கள் எவ்வித வன்முறையிலும் ஈடுபடவில்லை என உறுதியுடன் தெரிவிக்கின்றனர்.  ஆனால் சமூக தளங்களில் வெளியாகும் நேற்றைய நிகழ்வின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அதற்கு நேர் மாறான தகவல்களைத் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.