டில்லி
இன்று குளிர்கால தொடர் தொடங்கிய நிலையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்
டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அளித்துள்ள விடுதிக் கட்டணம் உயர்வு, ஆடைக் குறியீடு மற்றும் ஊரடங்கு உத்தரவு நேரங்களுக்கான ஏற்பாடுகளைக் கொண்ட வரைவு விடுதி கையேட்டிற்கு எதிராக மாணவர்கள், கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பல்கலைக்கழகத்தின் இயல்பான செயல்பாட்டை மீட்டெடுப்பதற்கான வழிகளைப் பரிந்துரைக்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது.
ஆனால் இந்த குழுவை அமைத்ததில் திருப்தியடையாத ஜேஎன்யூ மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் சரியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து பல்லைக்கழக வளாகத்திலிருந்து தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு நடக்கும் இரண்டாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 13 ஆம் தேதி முடிவடைய உள்ளது.
இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால அமர்வின் முதல் நாளில் நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் எதிர்ப்பு ஊர்வலம் தொடங்கப்பட்டது. அந்த அணிவகுப்புப் பேரணியின்போது “பொதுக் கல்வியைக் காப்பாற்றுங்கள்”, கட்டணம் குறைய வேண்டும்” ”அனைவருக்கும் மலிவு விலையில் விடுதிகளை உறுதிப்படுத்துங்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தி வந்து முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்
காவல்துறை அதிகாரிகள், ”டில்லியில் ஜேஎன்யூ மாணவர்கள் தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதால் ஜே.என்.யூவுக்கு வெளியே பத்து கம்பெனி காவல்துறை படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதாவது ஒரு கம்பெனி 70 முதல் 80 காவலர்களைக் கொண்டுள்ளதாகும்.
இன்று நடந்த ஜேஎன்யூ மாணவர்களின் பேரணி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றதால், வழியிலேயே காவல்துறை தடுத்து நிறுத்தியது. முதலில், ஜே.என்.யூவின் வாயில்களுக்கு வெளியே இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு மாணவர்கள் அணிவகுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மாணவர்களின் பேரணி தொடங்கிய இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் செல்லும்போதே காவல் துறையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.” எனத் தெரிவித்தனர்.