டெல்லி: நாடாளுமன்றத்தை நோக்கி ஜேஎன்யூ மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்றதால் திடீர் பரபரப்பு நிலவியது.
புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக 2 வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டது, ஆடைக் கட்டுப்பாடு ஆகிய காரணங்களை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
நாளுக்குநாள் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தற்போது நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணியாக சென்றனர். அதனால் 1,200க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புக்காக நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி குவிக்கப்பட்டனர்.
தடுப்புகளை வைத்து மாணவர்களை தடுக்கும் நடவடிக்கையில் அவர்கள் இறங்கினர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு உருவானது. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் சாய் பாலாஜி கூறியதாவது: எங்களின் போராட்டத்தை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
நாடாளுமன்ற வடக்கு பகுதியில் ஒரு கிலோ மீட்டர் முன்பாகவே நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம் என்றார். மாணவர்கள் போராட்டத்தை முன்னிட்டு, அப்பகுதியில் ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.