டில்லி
டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் போராளிகளான கன்னையா குமார் மற்றும் ஷெஹ்லா ரஷீத் ஆகியோர் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர்கள் தலைவர்கள் கன்னையா குமார் மற்றும் ஷெஹ்லா ரஷீத் ஆகியோர் ஆவார். இதில் ஷெஹ்லா ரஷித் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். 27 வயதான இவர் இடதுசாரி ஆதரவாளர். இவரது 14 நிமிட அரசை எதிர்த்து பேசிய வீடியோவின் மூலம் மாணவர்களிடையே புகழ் பெற்றவர். பீகார் மாநிலத்தை சேர்ந்த கன்னையா குமார் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மாணவர் சங்கத் தலைவர் ஆவார்.
தற்போது இந்த இருவரும் வரும் 2019ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்துக் குரல் கொடுத்து வரும் இருவரும் ஏற்கனவே குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானிக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளனர்.
கன்னையா குமார், “பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளின் கூட்டணி அமைந்து என்னை போட்டியிடச் சொன்னால் நான் போட்டியிடுவேன். நான் அமைப்பு சார்ந்த அரசியலை வரவேற்கிறேன். எனவே ஏதாவது ஒரு கட்சியின் சார்பில் போட்டியிடுவதையே நான் விரும்புகிறேன். எனது குடும்பமே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களைக் கொண்ட குடும்பம். எனவே கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஷேஹ்லா ரஷீத், “இதுவரை பொதுத் தேர்தல்களில் போட்டியிடுவது பற்றிய விவரங்கள் எனக்கு தெரியாது. எனக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட வாய்ப்பளித்தால் நான் போட்டியிட தயாராக உள்ளேன். எந்தக் கட்சி சார்பில் போட்டியிட வேண்டும் என்பதையோ எந்த தொகுயில் போட்டியிட வேண்டும் என்பதையோ நான் முடிவு செய்யவில்லை” எனக் கூறி உள்ளார்.