டெல்லி: டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடலாம் என்று அப்பல்கலை. நிர்வாகத்தின் பரிந்துரையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்க மறுத்த தகவல் வெளியாகி இருக்கிறது.
புகழ்பெற்ற ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. விடுதிக்குள் புகுந்த மர்ம கும்பல் அதிரடியாக வன்முறையை அரங்கேற்றியது.
இந் நிலையில் டெல்லியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், ஜேஎன்யூ நிர்வாகத்திற்கு இடையிலான திங்களன்று முக்கிய ஆலோசை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் இந்த பரிந்துரையை ஜேஎன்யூ முன் வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கூட்டத்தில் 2 பக்க அறிக்கை ஒன்றை ஜேஎன்யூ நிர்வாகம் சமர்ப்பித்து இருக்கிறது. அதில் முழுக்க, முழுக்க கட்டண உயர்வை எதிர்த்து போராடும் மாணவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறிக்கையில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் எப்படி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தனர் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.
அதற்கு பதிலாக, பல்கலைக்கழகம் காவல்துறையினரை அழைத்தது. ஆனால் அதற்கு முன்னதாக இரு தரப்பினர் இடையே தாக்குதல் சம்பவம் உச்சக்கட்டத்தை எட்டியதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சபர்மதி விடுதி சம்பவம் பற்றி குறிப்பிடப்பட வில்லை.
இந்த அறிக்கையை தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தின் போது, ஜேஎன்யூ வளாகத்தை மூடலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு செயலாளர் அமித் கரேவிடம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் நிராகரித்த அமைச்சகம், பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது.