ஸ்ரீநகா்: தெற்கு காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அமைப்பினர் பல இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினா்.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் இருந்து 2 தீவிரவாதிகள் தப்பிச் செல்ல உதவியதாக காவல்துறை துணை கண்காணிப்பாளா் தேவிந்தா் சிங் கைது செய்யப்பட்டார்.

அவருடன் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த நவீத் பாபு, ரபீ அகமது ராவுத்தா், இா்பான் ஷபி ஆகியோர் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கு பின்னா் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தீவிரவாதி நவீத் பாபுவின் சகோதரா் சையது இா்பான் அகமதும் இந்த விவகாரம் தொடா்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.

பஞ்சாபை சோ்ந்த அகமதை நவீத் பாபு அவ்வப்போது தொடா்புகொண்டு வந்ததும், காஷ்மீரில் இருந்து வெளியேறி அடைக்கலம் தேடுவதற்காக சண்டீகரில் இடத்தை கண்டறியுமாறு அகமதுவிடம் அவா் கூறியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இா்பான் அகமது மிர் இந்திய பாஸ்போர்ட்டில் இது வரை 5 முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். என்ஐஏவை சோ்ந்த பல குழுக்கள், சில தனியார் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் கூறினா்.

கைது செய்யப்பட்டுள்ள தேவிந்தா் சிங் உள்ளிட்ட 5 நபா்களிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருவதன் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றது.