ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிஜிட்டல் சர்வீசஸ் நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்குவதற்காக எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் நேற்று ஒப்பந்தம் செய்த நிலையில் அதன் போட்டி நிறுவனமான ஜியோ நிறுவனமும் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் தயாரிப்புகளை விற்பனை செய்ய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு இந்திய அரசு அனுமதி அளித்தால் மட்டுமே இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், கடந்த மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியிடம் உலகின் முன்னணி பணக்கார தொழிலதிபரான எலோன் மஸ்க் இதுகுறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

“இந்தியாவிற்கு ஸ்டார்லிங்கை அறிமுகப்படுத்த ஸ்பேஸ்எக்ஸ் உடனான எங்கள் ஒத்துழைப்பு, தடையற்ற பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது” என்று ஜியோ தெரிவித்துள்ளது.

“ஜியோ பிராட்பேண்ட் அமைப்பில் ஸ்டார்லிங்கை ஒருங்கிணைப்பதன் மூலம், அதிவேக பிராட்பேண்ட் சேவையின் நம்பகத்தன்மையுடன் AI சகாப்தத்தில் எங்கள் வரம்பை விரிவுபடுத்துகிறோம்” என்று அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.