மும்பை: ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தில் செலவினங்களை குறைப்பதற்காக அதிகளவிலான ஒப்பந்த ஊழியர்களும், குறிப்பிட்டளவு நிரந்தரப் பணியாளர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நன்கறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஜியோ எப்போதுமே அதிகளவு பணி வாய்ப்புகளை வழங்கும் நிறுவனமாக திகழும் என்றும், செலவினக் குறைப்புக்காக பணி நீக்கம் செய்தல் என்பது நடக்காது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் தொடர்புத் துறை, வழங்கல் துறை, மனித வளத்துறை, நிதித்துறை, நிர்வாகம் மற்றும் நெட்வொர்க் ஆகிய பிரிவுகளில் பணிக்குறைப்பு நடைபெற்றுள்ளதாக மேற்கூறிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், தமது தரப்பில் ஊழியர் பற்றாக்குறை நடைபெறவில்லை என்றும், பல ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து ஜியோ பணியாற்றுவதால், பலவித வேலைகளுக்கு அவர்களின் தரப்பில் பல ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கலாம் என்றும் ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனத்திலிருந்து சுமார் 5000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 500 முதல் 600 பேர்கள் வரை நிரந்தர ஊழியர்கள் என்றும் கூறப்படுகிறது.