வின்னிபெக், கனடா

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் ஏழைகளுக்கு வீடு கட்டும் பணியை செய்யும் அதே நேரத்தில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் கோல்ஃப் விளையாட்டுப் போட்டிகளை ரசித்து பொழுது போக்குகிறார்.

அமெரிக்க அதிபராக 1977 முதல் 1981 வரை பணியாற்றியவர் ஜிம்மி கார்ட்டர்.  அவர் அதற்குப் பின் சமூக சேவையில் ஈடுபட்டார்.  அவரது மக்கள் சேவையைப் பாராட்டி 2002ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.  இப்போது அவருக்கு 92 வயதானாலும், இப்போதும் ஏழைமக்களுக்காக கனடாவில் உள்ள வின்னிபெக் என்னும் நகரில் வீடுகள் அமைத்துத் தந்துள்ளார்.

சமீபத்தில் கடும் வெயிலில் கட்டிட வேலைகளை பார்வையிடும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் மயக்கம் அடைந்தார். பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் தேறியதும், உடனடியாக மீண்டும் கட்டிட வேலைகளை மேற்பார்வையிட வந்து விட்டார்.  இந்த கட்டிடம் அவர் கட்டித்தரும் 34ஆவது கட்டிடம் ஆகும்.  அவருக்கு இந்த வேலைகளில் உதவியாக இருப்பது 89 வயதான அவர் மனைவி ரோசலின்.

சமீபத்தில் இந்தக் கட்டிடம் கார்ட்டரால் திறந்து வைக்கப்பட்டது.  தன்னுடன் பணியாற்றிய அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியூஜெர்சியில் அவரது சொந்த நிறுவனமான ட்ரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப் நடத்திய போட்டிகளில் பார்வையாளராக கலந்துக் கொண்டார்.  அவர் பதவி ஏற்ற 176 நாட்களில் 36 நாட்கள் கோல்ஃப் விளையாட்டை பார்த்து ரசிப்பதில் கழித்துள்ளார்.  ஒபாமா அதிபராக இருந்த போது வெறும் 8 தினங்கள் மட்டுமே கோல்ஃப் போட்டிகளுக்கு வந்துள்ளார்.

யு எஸ் பெண்கள் ஓப்பன் கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டிகளை முழுவதுமாக கண்டு ரசித்த ஒரே அதிபர் ட்ரம்ப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.