பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் இருந்து சுயேச்சையாக மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான பிரகாஷ் ராஜ் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.   இவர் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.   சென்னையில் வசித்து வரும் இவர் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்குப் பின் அடிக்கடி கர்நாடக மாநிலத்துக்கு சென்று வருகிறார்.

அத்துடன் பிரகாஷ் ராஜ்   பாஜகவுக்கும் இந்து மத அமைப்புக்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.  பாஜக மற்றும் இந்து மத அமைப்புக்களுக்கு எதிரான போராட்டங்களிலும் இடது சாரி அமைப்புக்கலின் நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார்.    இவருடைய கருத்துக்களுக்கு பாஜகவினரிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

நேற்று பிரகாஷ் ராஜ் டிவிட்டரில், ”விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் எந்தக் கட்சியின் சார்பும் இன்றி சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளேன்.  எந்த தொகுதியில் போட்டியிட போகிறேன் என்பதை  பின்னர் அறிவிக்கிறேன்.  பல பொறுப்புள்ள பனிகளை இந்த  புதிய ஆண்டில் செய்ய வேண்டிய எனது கடமையை நான் செய்து முடிப்பேன்” என பதிந்துள்ளார்.

குஜராத் மாநில சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினரும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி பிரகாஷ் ராஜ் கருத்துக்கு, “நாம் இதை செய்து காட்டுவோம்.    இந்தியாவில் அதுவும் தென்னிந்தியாவில் நமக்கு தெரிந்தவர்கள் உங்களுக்காக வருவார்கள்.   நீங்கள் சாதிப்பீர்கள்.  உங்களுக்கு நான் இருக்கிறேன்.  குரலற்றவர்களின் குரலாக நீங்கள் இருக்க நாடாளுமன்றத்துக்கு நீங்கள் தேவை” என செய்தி வெளியிட்டுள்ளார்.

நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் வரிசையில்  தற்போது பிரகாஷ் ராஜும் அரசியலில் இறங்கி உள்ளது குறிப்பிடத் தக்கது.