சென்னை:  தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் 3ம் கட்ட விரிவாக்கத்திற்கு ஜப்பான்  நாட்டைச் சேர்ந்த சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ரூ.2,106 கோடி கடன் வழங்கு வதாக அறிவித்து உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் 3ம் கட்டம் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட முதலீட்டு சூழலை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

“உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்க்க வேண்டும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியினை அடைந்து, அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட வேண்டும்” என்பது அரசின் கொள்கையாகும்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை , தமிழ்நாட்டில் தொழில்முதலீடுகளை உருவாக்கி,  தொழில்மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமா திகழ் உறுதுணையாக இருந்து வருகிறது.   1991ஆம் ஆண்டில் தாராளமயமாக்குதல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட கால கட்டத்திலிருந்து, நாட்டின் தொழில் வளர்ச்சியை நிர்ணயிப்பதில், தனியார் துறையின் பங்கு அதிகரிக்க ஆரம்பித்தது.

தனியார் முதலீட்டை ஈர்ப்பதில் மாநிலங்களிடையே போட்டி உருவானபொழுது தமிழ்நாடு அரசு 1992ஆம் ஆண்டிலேயே தொழில் கொள்கை ஒன்றினை வெளியிட்டு இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டது. இந்த தொழில் கொள்கைதான் மாநிலத்தின் புதிய தொழிற்சாலைகள் விரைவாக உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது. தமிழ்நாட்டில் மின்னணு மற்றும் மோட்டார் வாகனத் தொழிற்புரட்சிக்கு இத்தொழில் கொள்கை வழிவகுத்தது. தொழில் வளர்ச்சியினை மாநிலத்தில் துரிதமாக்கியது, பெருந்தொழில் நிறுவனங்களிடமிருந்து பெருந்திட்டங்களை ஈர்ப்பதற்கு வழிவகுத்தது. இப்பெருந்திட்டங்களைச் சார்ந்து உதிரி, பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் உருவாகும் சூழ்நிலை உண்டானது.

இந்த நிலையில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான JICA தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்காக ரூ. 2,106 கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.  தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் 3ம் கட்டம் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப நிலையான, எதிர்காலம் சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்து வதற்காகவும் வளர்ந்து வரும் பசுமைத் துறைகளில் கவனம் செலுத்துவதாக உள்ளதாகவும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.