ராஞ்சி, 

தனது பெயர் சதாம் உசேன் என்பதாலேயே  வேலையின்றி தவிக்கும் இளைஞரின் சோகக் கதை இது. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்பார்கள். இங்கேயும் அதுதான் நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த இளைஞர் சதாம்உசேன். நூருல் இஸ்லாம் என்ற பல்கலைக்கழகத்தில் முதுநிலை வகுப்பு படித்த இவர், பல்கலைகழகத்திலேயே இரண்டாம் இடத்தை பிடித்து கடந்த 2014-ம் ஆண்டு வெளியேறினார்.

ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக வேலைக்காக பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.    பன்னாட்டு கப்பல் நிறுவனங்களில் சுமார் 40 முறை நேர்காணலுக்காக சென்றுள்ள சதாம் உசேன்,  தனது பெயர் இராக் சர்வாதிகாரியின் பெயர் என்பதாலேயே பணியில் சேர்க்க அந்நிறுவனங்கள் அச்சப்பட்டதாக கூறுகிறார்.

இவரது பெயரே இவருக்கு எமனாக உள்ளதே என வருத்தப்பட்ட இளைஞர் சதாம் உசேன், பெயரை மாற்ற எவ்வளவோ முயற்சித்தும் தோல்வியில் முடிந்துள்ளது.  யாரோ ஒரு சர்வாதிகாரியின் பெயர் என்பதற்காக அப்பாவி மாணவன் ஒருவனின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் மனித தன்மையின்றி   செயல்படுவதாக சமூக நோக்கர்கள் கருதுகின்றனர்.

பெயரில் என்ன உள்ளது என்றார் ஷேக்ஸ்பியர். பெயரில்தான் எல்லாமே உள்ளது என்கிறது சதாம் உசேன் என்ற மாணவனின் சோகக் கதை.