ராஞ்சி

ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்  ஜாமீன் மனுவுடன் ஆதார் எண் இணைக்க வேண்டியது அவசியமா என தெளிவுபடுத்துபடி உயர்நீதிமன்ற சட்டக் குழுவை கேட்டுள்ளது.

ஜார்க்கண்ட் உயர்நீதி மன்றத்தில் ஒரு வரதட்சணை வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு விசாரணைக்கு வந்தது.  அந்த வழக்கை நீதிபதி ஏ பி சிங் என்பவர் விசாரித்து வருகிறார்.  அந்த வழக்கின் தீர்ப்பை அவர் வழங்கும் போது சில கேள்விகளை உயர்நீதி மன்ற சட்டக்குழுவிடம் எழுப்பி, அதற்கான விளக்கங்களை கேட்டுள்ளார்.

அவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது :

”இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் முன் ஜாமீன் கோரி தலா இரண்டு மனுக்களை அளித்துள்ளனர்.  அதாவது ஒவ்வொருவரும் தனிதனியாக 2 மனு வீதம் நான்கு மனுவை அளித்துள்ளனர்.  அதில் ஒரு மனுவில் தவறான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  இது போல் ஒரே வழக்கில் ஒருவரே இரு முன் ஜாமீன் மனுக்களை பதிவு செய்வதை  தடுக்க வேண்டும்.

அதற்காக இனி வரும் காலங்களில் இது போல  ஜாமீன் மனு செய்பவர் நேரில் வந்து மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.  அவ்வாறு தாக்கல் செய்யும் போது அவர்களின் புகைப்படம் எடுத்து ஜாமீன் மனுவுடன் இணைக்க வேண்டும்.

அல்லது ஜாமீன் மனுவை அளிப்போர் தனது ஆதார் எண்ணையும் ஆதார் கார்டின் ஸெராக்ஸ் காப்பியையும் மனுவுடன் இணைக்க வேண்டும்.  இந்த இரண்டில் ஆதார் எண் மற்றும் ஆதார் கார்ட் ஸெராக்ஸ் இணைப்பது எளிது என தோன்றுகிறது.

எனவே ஜாமீன் மனுவுக்கு ஆதார் அவசியமா என்பதை நீதிமன்ற சட்டக் குழு தெளிவு படுத்த வேண்டும்.” என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  இந்த தீர்ப்பு உயர்நீதி மன்ற சட்டக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  விரைவில் குழு இதற்கான விளக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.