ராஞ்சி

ஜார்க்கண்ட் மாநில அரசு தனியார் சேவை நிறுவனத்தின் தீதி கிச்சன் மற்றும் தால் பாத் கேந்திரம் எனும் அமைப்புகளின் மூலம் மக்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறது.

ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் சாத்பர்வா என்னும் சிற்றூரில் 60 வயதான மாலதி தேவி தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.  ரேஷனில் கிடைக்கும் உணவு தானியங்கள் இவர்களுக்கு போதுமானதாக இல்லை.  மேலும் காய்கறிகள் மற்றும் சமையல் எண்ணெய் ஊரடங்கால் கிடைப்பதில்லை.  அதே ஊரில் உள்ள அர்ஜுன் மஞ்சி என்னும் தினக்கூலி தொழிலாளிக்கும்  இதே நிலை தான்.

இவர்களைப் போல் சுமார் 8 லட்சம் ஏழைகளுக்குத் தினசரி தீதி கிச்சன் மற்றும் தால் பாத் கேந்திராக்கள் மூலம் இலவச உணவு கிடைக்கின்றது.   தால் பாத் கேந்திரா தினம் ஒரு வேளையும் தீதி கிச்சன் தினம் இரு வேளையும் அனைத்து பஞ்சாயத்துக்களிலும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த பணியை செய்து வருகின்றன.

தீதி கிச்சன் கடந்த ஏப்ரல் 3 முதல் இயங்கி வருகிறது.   இந்த அமைப்பு தினமும் இலவசமாக 4.5 லட்சம் முதல் 5 லட்சம் பேருக்கு உணவு வழங்கி வருகிறது.  மாநிலம் முழுவதும் 6629 இடங்களில் பெண்கள் சுய உதவிக் குழுவால் தாமே முன் வந்து நடத்தப்படுகிறது.  இவை ஜார்க்கண்ட் மாநில வாழ்வாதார முன்னேற்றக் கழகத்தின் கீழ் இயங்குகின்றன..

மாலதி மற்றும் அர்ஜுன் சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்து வந்து உணவைப் பெற்று அதை தங்கள் குடும்பத்தினருக்கும் எடுத்துச் செல்கின்றனர். மாலதி, “உதவி செய்ய யாரும் இல்லாத நாங்கள் வேறு என்ன செய்ய முடியும்?  அரசு உணவு அளிப்பதால் எங்களுக்குச் சிறு நிம்மதி கிடைக்கிறது” எனக் கூறுகிறார்.

இது குறித்து ஜார்க்கண்ட் மாநில வாழ்வாதார முன்னேற்றக் கழக அதிகாரி பிரீதி குமாரி, “நாங்கள் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ரூ.20000 முதல் ரூ. 40000 வரை அளித்து உணவு தானியங்கள், எண்ணெய்,காய்கறிகள் வாங்க உதவுகிறோம்.  முதல் கட்டமாக நாங்கள் ஒரு பஞ்சாயத்துக்கு ஒரு மையத்தைத் தொடங்கினோம்.  தற்போது அது இரண்டாகி உள்ளது.    மாநிலத்திலுள்ள 2.5 லட்சம் சுய உதவிக் குழுக்களை நாங்கள் உதவிக்கு அமர்த்தி உள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

சாத்பர்வா பகுதியில் சுய உதவிக்குழுவை சேர்ண்ட ஹீராமதி தேவி,” நாங்கள் தினசரி 150 முதல்160 பேருக்கு உணவு அளித்து வருகிறோம். இதில் பெரும்பாலானோர் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் ஆவார்கள்.   எங்களுக்குத் தேவையான பொருட்களைக் கழகம் அளிக்கும் நிதி உதவி மூலம் வாங்கிக் கொள்கிறோம்.  அத்துடன் பஞ்சாயத்தும் எங்களுக்கு சில பொருட்களை வழங்குகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.