ராஞ்சி
ஜார்க்கண்ட் மாநிலம் பார்கி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உமாசங்கர் அகேலா பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் இந்த மாதம் நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் டிசம்பர் 23 அன்று எண்ணப்பட உள்ளது. டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி அன்று பார்கி தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.
பார்கி தொகுதியில் பாஜகவின் உமாசங்கர் அகேலா கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் அடுத்து நடைபெற்ற 2014 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் காங்கிரசைச் சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவரிடம் தோல்வி அடைந்தார். தற்போதைய தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட விருப்பம் கொண்டிருந்தார்.
காங்கிரஸ் உறுப்பினர் மனோஜ் யாதவ் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி மாநில்பாஜகவில் சேர்ந்துள்ளார். அவருக்கு அவர் உறுப்பினராக உள்ள பார்கி தொகுதியை பாஜக அளித்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அகேலா பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஜார்க்காண்ட் மாநில பொறுப்பாளர் சிங், அம்மாநில தலைவர் ராமேஷ்வ்ர் ஒரியன், தேவராஜ் தேஷ்முக் ஆகியோர் முன்னிலையில் அகேலா காங்கிரசில் இணைந்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பார்கி தொகுதியில் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.