ராம்கர்

ஜார்க்கண்ட் மாநில நீதிமன்றம் ஒரு பலாத்கார வழக்கில் நான்கே நாட்கள் விசாரணை செய்து  தீர்ப்பு அளித்துள்ளது.

நீதிமன்றங்களில் ஆண்டுக்கணக்கில் விசாரணைகள் நீளும், நம்ம இந்தியாவில் நான்கே நாளில் விசாரணையை முடித்து, அதிரடி தீர்ப்பு வழங்கி,  ஜார்கண்ட் மாநில நீதிமன்றம் புருவம் உயர்த்த செய்துள்ளது.

அந்த மாநிலத்தின் தும்கா மாவட்டத்தில் உள்ள ராம்கர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை அவரது மாமா  கடந்த மாதம் 5 ஆம் தேதி கோயில் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றுள்ளான்..

அவனது நண்பர்கள் இருவரும் உடன் சென்றுள்ளனர்.

வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த சிறுமியை மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவளைக் கொன்று, அருகேயுள்ள வயலில் புதைத்து விட்டனர்.

சிறுமியின் தாத்தா இது குறித்து ராம்கர் போலீசில் புகார் செய்துள்ளார்.

அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் , சிறுமியின் மாமாவை மும்பையிலும், மற்ற இரு ஆசாமிகளை உள்ளூரிலும் கைது செய்து கடந்த 26 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

கைதான கயவர்களிடம் டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டு அது குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

28 ஆம் தேதி விசாரணையை ஆரம்பித்தார், நீதிபதி, தோபிகுல் ஹாசன்.  சாட்சியம் அளிக்கக் கூண்டில் ஏறிய சிறுமியின் தாத்தா ‘’ இந்த கொடியவர்களைத் தூக்கில் போடுங்கள்’’ என்று கதறினார்.

நான்கே நாளில் விசாரணையை முடித்த நீதிபதி, சிறுமியின் தாத்தா வேண்டுகோள் விடுத்ததை மனதில் வைத்து மூன்று கயவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளித்தார்.

‘’ கொடூரச் செயலில் ஈடுபட்ட இவர்களுக்கு மரண தண்டனையைக் காட்டிலும் வேறு குறைந்த பட்ச தண்டனை  வழங்க முடியாது’’ என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

‘மகளிர் தினம் வரவிருக்கும் நாளில் எங்களுக்கு நீதிமன்றம் அளித்த பரிசு –இந்த அற்புதமான  தீர்ப்பு என அங்குள்ள பெண்கள், இந்த தீர்ப்பைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

-ஏழுமலை வெங்கடேசன்