சென்னை,

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ள நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் ஜெ.மரணம் தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே அரசு மற்றும் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெ.தீபா, மாதவன் உள்பட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்து உள்ளது. அதுபோல ஜெ.வின் பாதுகாப்பு காவலர் பெருமாள் சாமி உள்பட   சசிகலாவின்  உறவினர்களான டிடிவி தினகரன், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதா உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய, முன்னாள் அமைச்சர் பொன்னையன், ஜெயலலிதாவுக்கு சசிகலா சிறிது சிறிதாக கொல்லும் ஸ்டீராய்டு எனப்படும் ஸ்லோ பாய்சன்  என்ற விஷத்தை கொடுத்துள்ளனர் என்று பேசினார்.

அதுகுறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்ப முடிவு செய்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஞ்சிபுரத்தில் பொன்னையன் பேசியது….

ஜெ.வுக்கு ஸ்டிராய்டு விஷம் கொடுத்து கொன்றுவிட்டனர்: சசி மீது பொன்னையன் குற்றச்சாட்டு