சென்னை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அதிமுக தொண்டர்களும், எதிர்க்கட்சியினர் கோரியதை தொடர்ந்து, தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்தது.
விசாரணை ஆணையத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைவராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து விசாரணை ஆணையத்திற்காக சென்னை எழிலகம் அரசு அலுவலகத்தில் விசாரணை கமிஷனுக்காக அறை ஒதுக்கப்பட்டது.
கடந்த மாதம் 27-ந்தேதி அலுவலகம் வந்த நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணை தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கினார்.
அதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் சொல்ல விரும்புவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை விசாரணை கமிஷனில் கொடுத்து விசாரணையில் ஆஜராகலாம் என்றும் நவம்பர் 22-ந்தேதிக்குள் இது தொடர்பான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து ஏராளமானோர் விசாரணை கமிஷனில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும், தபால் மூலமும் ஏராளமான பிரமாண பத்திரங்களை பலர் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் விசாரணையில் ஆஜராக சம்பந்தப்பட்டவர்கள் என 15 பேர்களுக்கு நீதிபதி ஆறுமுகசாமி முதற்கட்டமாக நோட்டீசு அனுப்பி உள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த 75 நாட்கள் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள், அப்பல்லோ, எய்ம்ஸ் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சைகள், அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் தொடர்பான மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்வதற்கு உயர்மட்ட டாக்டர்கள் குழுவை விசாரணை கமிஷன் நீதிபதி ஆறுமுகசாமி அமைத்துள்ளார்.
இந்த மருத்துவக்குழுவில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அனுபவம்மிக்க மூத்த மருத்துவர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை ஆராய்ந்து, அதுகுறித்த உண்மையான தகவல்களை விசாரணை ஆணையத்துக்கு அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
எந்தெந்த மருத்துவர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.