டில்லி

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் விமானச் சேவையைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய விமானச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் கடன் சுமையால் தள்ளாடி வந்தது    நிதி நெருக்கடி அதிகரித்து தினசரி சேவைக்கான அளவுக்கும் நிதி இல்லாத நிலை ஏற்பட்டது.  இதையொட்டி கடந்த 2019 அம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது சேவையை முழுவதுமாக நிறுத்தியது.

தற்போது மீண்டும் அன்ந்த நிறுவனத்தை இயக்க கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இது குறித்து ஜலான் கல்ராக் குழுமம் ஒரு சீரமைப்பு திட்டத்தை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் அளித்தது.  இதற்கு தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்ததால் சுமார் இரண்டு ஆண்டுகளாக முடங்கி இருக்கும் ஜெட் ஏர்வேஸ் விமானம் மீண்டும் இயங்கலாம் என நம்பிக்கை எழுந்தது.

இது குறித்து ஜலான் கல்ராக் குழுமத் தலைவர் முராரி லால் ஜலான், “ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமையகம் மும்பைக்குப் பதிலாக டில்லியில் இருந்து இயங்க உள்ளது.  இந்நிறுவனம் அடுத்த அண்டின் முதல் காலாண்டில் தனது சேவையை தொடங்கும்.  முதலில் உள்நாட்டுச் சேவைகள் தொடங்கப்பட்டு அதன் பிறகு வெளிநாட்டுச் சேவை மூன்றாவது அல்லது நாலாம் காலாண்டில் தொடங்கும்” என அறிவித்துள்ளார்.