டில்லி

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் தங்களுக்கு ஊதியம் அளிக்காதது பற்றி பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. வழக்கமாக நடைபெறும் 450 விமான சேவைகளில் 150 சேவைகளை மட்டுமே தற்போது நடத்தி வருகிறது. அதாவது செலவைக் குறைக்க சேவைகள் மூன்றில் ஒரு பங்காக குறிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வங்கி உள்ளிட்ட பல நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனையும் திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளது.

அனைத்துக்கும் மேலாக ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய ஊதியம் சரிவர அளிக்காததால் ஊழியர்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் பிரதமர் மோடி மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

அந்த கடிதத்தில்,”ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடக்கப்படலாம் என அஞ்சுகிறோம். இதனால் ஆயிரக்கணக்கானோர் பணி இழப்பார்கள். அத்துடன் விமான சேவைகள் குறைவதால் பயணக் கட்டணம் அதிகரிக்கக் கூடும். இது விமான பயணிகளுக்கு கடும் துயரத்தை உண்டாக்கும்.

அத்துடன் விமான ஓட்டிகள் மற்றும் பொறியாளர்களுக்கு சுமார் மூன்று மாத ஊதியம் நிலுவையில் உள்ளது.    விமான நிறுவனம் மிகவும் நிதி நெருக்கடியில் உள்ளதால் எங்களுக்கு உடனடியாக ஊதியம் கிடைக்கும் என தோன்றவில்லை. ஆகவே இதில் அரசு தலையிட்டு எங்கள் ஊதிய பாக்கியை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊதியம் கிடைக்கததால் துயருரும் விமானிகள் வேலை நிறுத்தம் செய்ய எண்ணி இருந்தோம்.   ஆனால் விமான பயணிகள் பாதிப்பு அடையக் கூடாது என்னும் நல்லெண்ணத்தால் நாங்கள் அந்த வேலை நிறுத்தத்தை கை விட்டோம்.” என தெரிவிக்கபட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகமும் மற்றும் விமான பயண அமைச்சகமும் இது வரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.