சத்ய பாமா கல்விகுழும தலைவரும் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளருமான ஜேப்பியார் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அவருக்கு வயது 85.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தை சேர்ந்தவர் ஜேப்பியார், எம்ஜிஆரின் தீவிர விசுவாசி. அதிமுகவ துவக்கப்பட்டபோது எம்ஜிஆருடன் கட்சிப்படிவத்தில் கையெழுத்திட்டவர்களில் ஜேப்பியாரும் ஒருவர். எம்.ஜி.ஆரின் பாதுகாவலராக தமிழகம் முழுதும் அவருடன் சென்றுவந்தவர்.
1973ல் அ.தி.மு.க.வின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் பொறுப்பு ஏற்றார் ஜேப்பியார். 1977ல் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு குடிநீர் வாரிய தலைவரானார். பின்னர் எம்.எல்.சி ஆன ஜேப்பியார் , மேலவை கொறடாவாகவும் செயல்பட்டார்.
எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் ஜானகி அணியில் சிறிதுகாலம் இருந்தவர் பிறகு முழுமையாக அரசியலை விட்டு ஒதுங்கினார்.
எம்ஜிஆரின் தாயார் பெயரில் அன்னை சத்தியபாமா பொறியியல் கல்லூரி துவக்கினார். பிறகு இது பல்கலையாக உயர்ந்தது.
“கல்வித்தந்தை” என்று ஒரு புறமும் பாராட்டப்பட்ட இவர், “அதிரடி பிரமுகர், முன்னாள் சாராய வியாபாரி, ஆக்கிரமிப்பு இடத்தில் கல்விக்குழுமம் நடததியவர்” என்று இன்னொரு புறம் விமர்சனமும் செய்யப்பட்டார்.
சமீபகாலமாகவே, வயோதிகம் காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.