டெல்லி: 2023ம் ஆண்டு ஜெஇஇ தேர்வு கட்டணத்தை 70சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை உயர்த்தி தேசிய தேர்வு முகமை மாணாக்கர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களாக ஐஐடி, என்ஐடி போன்ற தலைசிறந்த கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர ஜே.இ.இ நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாணம். அதாவது, தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT), பிற மத்திய் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (CFTI) மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பு (BE/B. Tech) சேர்க்கைக்காக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (முதன்மை JEE Main) நடத்தப்படுகிறது.
அதன்படி, 2023ம்ஆண்டு ஜெஇஇ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே ஐஐடி நிறுவனங் களில் சேர்த்து படிப்பதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (JEE – Advanced) பங்கு பெற முடியும். இந்த தேர்வை எழுத, 2021, 2022ல் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.
BE/BTech படிப்புகளில் சேர்க்கை பெற 12 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 75% பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு (SC/ST) இந்த எண்ணிக்கை 65% ஆகும். மேலும், கணிதம், இயற்பியலை கட்டாயப் பாடங்களாக கொண்டிருக்க வேண்டும். வேதியியல்/ உயிரியல்/ உயிரி தொழில்நுட்பம்/ தொழில்நுட்ப தொழிற்கல்வி பாடம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். B.Arch படிப்புக்கு 10+2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது 10+3 கணிதத்துடன் கூடிய டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான ஜெஇஇ தேர்வு தேதிகளை தேசிய கல்வி முகமை ஏற்கனவே அறிவித்து உள்ளது. அதன்படி டிசம்பர் 15ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 12.01.2023 என அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஒருவாரம் ஜெஇஇ தேர்வு நடைபெற இருக்கிறது.
இதையடுத்து, தற்போது ஜெஇஇ தேர்வு கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வு முகமையான என்டிஏ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், இந்தியாவில் தேர்வு மையங்களின் எண்ணிக்கை குறைத்துள்ளதுடன்; வெளிநாட்டில் தேர்வு மையங்களை அதிகரித்து உள்ளது.
அதே வேளையில், JEE முதன்மை 2023 பதிவுக் கட்டணம்- JEE முதன்மை 2023 பதிவுக் கட்டணத்தை NTA திருத்தியுள்ளது. JEE Main 2023 இல் ஒரு தாளுக்கு விண்ணப்பிக்கும் பொது/ OBC/EWS ஆண் விண்ணப்பதாரர்கள் INR 1000 செலுத்த வேண்டும். இதற்கிடையில், பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக INR 800 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து விண்ணப்பாரர்களான , SC/ST/PwD மற்றும் மூன்றாம் பாலின வேட்பாளர்கள் JEE முதன்மை 2023 விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும் போது திருத்தப்பட்ட கட்டணமாக INR 500 செலுத்த வேண்டும். JEE முதன்மை 2023 பதிவுக் கட்டணம் திரும்பப் பெறப்படாது.
இந்தியாவிற்கு வெளியே தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான JEE முதன்மை 2023 பதிவுக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. JEE Main 2023 இல் ஒரு தாளுக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினர் 5000 ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டு வரை (2022) JEE முதன்மை பதிவுக் கட்டணம் INR 650 மற்றும் பெண்களுக்கு கட்டணமாக 325 ஆக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2023ம் அண்டு நடைபெற உள்ள ஜேஇஇ தேர்வு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுஉள்ளது. அதாவது, ரூ.650 வசூலிக்கப்பட்ட கட்டணம், தற்போது 1000 ஆக உயர்த்தி உள்ளது. குறைந்த பட்சம் 70 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதுபோல பெண்களுக்கான கட்டணம் ரூ.325 ஆக இருந்தது, தற்போது 800 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டுஉள்ளது.
தேசிய தேர்வு முகமை நுழைவு தேர்வுக்கான கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி உள்ளதால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கூறுகையில், ‘ஜே.இ.இ மெயின் தேர்வானது கடந்த 2022ம் ஆண்டில் 13 வெளிநாடுகளில் மட்டுமே நடைபெற்றது. ஆனால் அடுத்தாண்டு (2023) 24 ெவளிநாட்டு தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும். அந்த பட்டியலில் முதன் முறையாக சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த தேர்வு நடைபெறும்.
மற்றபடி ஏற்கனவே பட்டியலில் இருந்த பஹ்ரைன், இலங்கை, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், ஓமன், சவுதி அரேபியா, சிங்கப்பூர், குவைத், மலேசியா, நைஜீரியா, இந்தோனேசியா, ஆஸ்திரியா, பிரேசில், கனடா, ஹாங்காங், மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் ஜேஇஇ மெயின் தேர்வு நடைபெறும்.
2023ல் இந்தியாவில் 399 மையங்களிலும், அதே தேர்வு 2022ம் ஆண்டில் 501 மையங்களிலும் நடைபெறும். 2023ம் ஆண்டுக்கான தேர்வு மையங்களின் எண்ணிக்கை 102 என்ற அளவில் தேசிய தேர்வு முகமை குறைத்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் மையங்களில் எண்ணிக்கையை தேசிய தேர்வு முகமை அதிகரித்துள்ளது.
மத்தியஅரசின் இந்த நடவடிக்கை தேர்வு எழுத தயாராகும் மாணாக்கர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.