டில்லி
பாஜகவுக்கு மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் சிவசேனா இட ஒதுக்கீடு கேட்பது போல் மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் கேட்கிறது.
மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற பாஜக மத்திய அமைச்சரவையில் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியை ஒதுக்கீடு செய்தது. இது பல அரசியல் தலைவர்களுக்கு அதிருப்தியை அளித்தது. பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தமது கட்சி மத்திய அமைச்சரவையில் பங்கேற்காது எனத் தெரிவித்தார்.
தற்போது நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – சிவசேனா கட்சி இணைந்து பெரும்பான்மையைப் பெற்றது. ஆயினும் சிவசேனா கட்சி அமைச்சரவையில் சம ஒதுக்கீடு மற்றும் முதல்வர் பதவியைக் கோரியது ஆகிய காரணங்களால் இன்னும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பாஜக உள்ளது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் மத்திய அமைச்சரவையில் தங்களுக்கு ஒதுக்கீடு கோரி உள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியக்குழுக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவராகப் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் மீண்டும் மூன்று வருடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் பாஜகவுக்கு விகிதாச்சார அடிப்படையில் பீகார் அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளதைச் சுட்டிக் காட்டினார் அவருடைய பேச்சு குறித்து அக்கட்சியின் பொதுச் செயலர் கே சி தியாகி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
கே சி தியாகி , ”கடந்த 2015 ஆம் வருட பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிராக இருந்தது. ஆயினும் நிதிஷ் குமார் அக்கட்சிக்குத் துணை முதல்வர் பதவியையும் அமைச்சரவையில் விகிதாச்சார அடிப்படையில் பங்கும் அளித்தார். ஆனால் பாஜக மத்திய அமைச்சரவையில் ஒரு அமைச்சர் பதவி மட்டுமே அளித்தது.
அதனால் நாங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற மறுத்தோம். மோடி மற்றும் அமித்ஷா இது குறித்து நடவடிக்கை எடுத்து விகிதாச்சார அடிப்படையில் அமைச்சரவையில் இடம் அளித்தால் அதை நாங்கள் வரவேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.