கவுகாத்தி::

குடியுரிமைச் சட்டதிருத்த மசோவை ராஜ்யசபையில் தாக்கல் செய்யும் போது, தங்கள் கட்சியின் 6 எம்பிக்கள் எதிர்த்து வாக்களிப்பர் என ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது.


வெளிநாடுகளில் வாழ்ந்த இந்து, கிறிஸ்தவர்,சீக்கியர், புத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பங்களாதேஷிலிருந்து வந்த பார்சி மதத்தினர், மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தால், அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் சட்டதிருத்த மசோவை மத்திய அரசு கொண்டு வந்தது.

இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனினும், இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இன்னும் ராஜ்யசபையில் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், ஐக்கிய ஜனததளம் கட்சியின் பொதுச் செயலாளர் தியாகி தலைமையிலான 4 நபர் குழு, திங்களன்று அசாம் கன பரிஷத் கட்சித் தலைவர்களை சந்தித்தனர்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அசாம் மாணவர் சங்கங்களையும் சந்தித்த இந்த குழுவினர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கேசி.தியாகி கூறும்போது, குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு எங்கள் 6 எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வாக்களிப்பர்.

மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்தபோது, காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது. அதுபோல் ராஜ்யசபையில் காங்கிரஸ் வெளிநடப்பு செய்யாமல் இருந்தால், எதிர்த்து வாக்களித்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தோற்கடிப்போம் என்றார்.