பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மஜத யாருடனும் கூட்டணி அமைக்காது என அக்கட்சித் தலைவர் தேவே கவுடா தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி அன்று கர்நாடக மாநில சட்டப்பேரவையில் காலியாக உள்ள 15 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.   இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன.   நேற்று பெங்களூருவில் முன்னாள்  பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவே கவுடா செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

அப்போது தேவே கவுடா, “சென்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை என்பதால்  காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை முதல்வராக அமர்த்தலாம் என நான் விருப்பம் தெரிவித்தேன்.  ஆனால் அதற்கு காங்கிரஸில் இருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், குமாரசாமி முதல் வராக பொறுப்பேற்றார்.

சுமார் 14 மாதங்கள் குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்த நிலையில், சிலரின் சுயநலத்தால் அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஆட்சிக் கலைப்பில் காங்கிரஸுக்கும் பங்கு இருக்கிறது. இதை;போல் ஏற்கனவே கடந்த 2006-ல் குமாரசாமி ஆட்சியை பாஜகவினர் கவிழ்த்தனர்.

மஜதவை முழுமையாக ஆள விடாமல் தடுத்ததில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே பங்கு இருக்கிறது.  ஆகவே இந்த இரண்டு கட்சிகளை யும் நாங்கள் நம்புவதில்லை.

இனி  காங்கிரஸ், பாஜக‌வுடன் மஜதவுக்கு எவ்வித‌ தொடர்பும் கிடையாது என்பதால் அந்தக்கட்சிகளுடன் கூட்டணி அமைக்கமாட்டோம். இந்த இரு கட்சிகளும் தேவைப்படும்போது எங்களை பயன்படுத்திக் கொண்டு, பின்னர் அழிக்க முயல்வார்கள்.

இந்த இரு கட்சிகளின் பிரதான நோக்கமே எங்கள் கட்சியை அழிப்பது ஆகும். அதனால், வரும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதில்லை.  மாறாக மஜத தனித்து போட்டி யிட உள்ளது.. பாஜகவுடன் நாங்கள் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்ப தாக கூறுவதை ஏற்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.