சென்னை,

“ஜெயலலிதாவின் ஆன்மா, ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்காது” என்று அமைச்சர் ஜெயக்குமார், ஆவேசமாக தெரிவித்தார்.

தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் ராயபுரம் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் தெரிவித்ததாவது:

“விரைவில் பொதுத்தேர்தல் வரும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது தவறு. தேர்தல் ஆசைக்காக அதிமுக ஆட்சி விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என்கிறர். நடப்பது ஜெயலலிதா வின் ஆட்சி. இதை அழிக்க நினைக்கும் பன்னீர்செல்வத்தை  ஜெ. ஆன்மா மன்னிக்காது.

அதிமுக அரசு கலைய வேண்டும் என ஓ.பி.எஸ் அணியினர் விரும்புகின்றனர்.  2021ம் ஆண்டுதான் தேர்தல் வரும். அதற்கு முன் சட்டமன்றத் தேர்தல் வராது.

தன்னை ஆதரிக்கும் சில எம்.எல்.ஏக்களை திருப்தி படுத்த இது போல அவர் பேசி வருகிறார் இது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கலாம். ஆனால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சி கிடையாது.

ஐந்தாண்டுகளை இந்த ஆட்சி நிறைவு செய்ய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என்று தெரி வித்த ஜெயக்குமார், “ அதே நேரம், பன்னீர் செல்வம் அணியினருக்கு தற்போதும் அழைப்பு விடுக்கிறோம்.  அவர்கள் எப்போது வந்தாலும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.  இதையே அழைப்பாக ஏற்று அவர்கள் வரட்டும்” என்று தெரிவித்தார்.

மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எங்களது, பாராளுமன்ற துணை சபாநாயகர் இது  குறித்து  தெளிவாக கருத்து சொல்லி இருக்கிறார்,

மக்கள் ஏற்றுக்கொள்ளும் விஷயத்தை நிச்சயமாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம். மக்கள் ஏற்றுக்கொள்ளாத விஷயத்தை நிச்சயமாக நாங்கள் ஏற்க மாட்டோம் என்று அவர் கூறினார்.  அது தான் அனைவரின் கருத்தாகும்” என்றார்.

அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் இதழில்  மத்திய அரசை விமர்சித்து கட்டுரை வெளிவந்துள்ளது குறித்த கேள்விக்கு, “  நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் வெளிவந்த கருத்து அந்த பத்திரிக்கையின் கருத்தாக இருக்கலாமே தவிற அது அஇஅதிமுக அதிகாரப்பூர்வ கருத்து கிடையாது” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஜாமீனில் வெளிவந்திருக்கும் டிடிவி தினகரனை சந்திப்பீர்களா என்று கேட்டதற்கு, “எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். யாரும் பின்னணியில் இல்லை, யாரும் பின்னால் இருந்து இந்த அரசை இயக்கவில்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.