சென்னை,
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி ஜெயலலிதா அவரது வீட்டில் இருந்து அப்பல்லோ ஆம்புலன்சு மூலம் அழைத்துச்செல்லப்பட்டபோது உள்ள ரிப்போர்ட்டும், அப்பல்லோ வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளான செப்.23-ம் தேதி அப்பபல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது
அதில் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் அவர் காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் வழக்கமான உணவை உட்கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 22ந்தேதி இரவு ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவர்கள் ஆம்புலன்சில் கொண்டு சென்ற போது அவர் சுயநினைவின்றி இருந்ததாக ஆம்புலன்சு கேர் ரிப்போரிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்று இரவு 10 மணிக்கு அப்பல்லோவுக்கு முதல்வரின் போயஸ் இல்லத்தில் இருந்து அழைப்பு வந்ததாகவும், உடனே 10.01 மணிக்கு அப்பல்லோ ஆம்புலன்சு புறப்பட்டு 10.05 மணிக்கு அவரது வீட்டை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உடனே ஆம்புலன்சில் வந்த மருத்துவக்குழுவினர், முதல்மாடியில் இருந்த அவரது அறைக்கு சென்றனர். அங்கே, படுக்கையில் ஜெயலலிதா சுயநினைவின்றி இருந்தார். அவரை அழைத்த போது, அவரிடம் இருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. உடனடியாக அவரக்கு முதலகட்ட மருத்து சோதனைகள் செய்யப்பட்டது.
அப்போது அவரது சுகர் அளவு 508 இருந்தாகவும், மூச்சுத்திணறல் காரணமாக அவரது சுவாசம் குறைந்து இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் உதவி யோடு ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.
அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனை செய்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் அவரது உடலில் ரத்த அளவு அபாய அளவில் இருந்ததை உறுதி செய்கிறது.
அவரது உடலில் காயமோ, புண்களோ இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியிருக்கையில், ஜெயலலிதா வெறும் காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு என்று அப்பல்லோ நிர்வாகம் பொய் கூறியது ஏன்? என்ற சந்தேகம் மக்களிடம் வலுவடைந்து வருகிறது.
மேலும் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், அவரது உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க விட்டது எப்படி? என்றும் கேள்வி எழுந்துள்ளது.
மேலும் 21ந்தேதி நலமாக இருந்த ஜெயலலிதா 22ந்தேதி சுயநினைவில்லா நிலைக்கு செல்ல காரணமா என்ன என்றும் சந்தேகம் கிளம்பி உள்ளது.
இதற்கிடையில் ஜெயலலிதான் மரணத்தை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட தேதியான 22-09-16 முதல் டிசம்பர் 5 அன்று அவரது இறப்பு வரை மட்டுமே விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளது.
இதுபோன்ற சூழலில்தான், தமிழகத்தில் நடைபெற்ற கடந்த ஆண்டு நவம்பர் 19ந்தேதி நடைபெற்ற அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்த பி படிவம் தேர்தல் ஆணையத்தில் வேட்புமனுவின்போது அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்போதே எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றிபெற்றது.
அப்போது திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து , அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் கடந்த ஆண்டு நவம்பரில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார. அதில், ஜெயலிதாவின் கைரேகை குறித்து சந்தேகம் எழுப்பியிருந்தார்.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட்டு நீதிபதியும் பல சந்தேகங்களை எழுப்பி இருந்தார். இதுகுறித்து தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் கோர்ட்டுக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 22ந்தேதி திமுக சரவணன் மேலும் ஒரு அபிடவிட் தாக்கல் செய்தார். அதில், அப்பல்லோ அறிக்கைப்படி ஜெயலலிதா சுயநினைவின்றி இருந்தபோது, ஜெயலலிதா எப்படி விரல் ரேகை பதிந்தார் என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், அவருக்கு தெரியாமலே கைரேகை பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை செய்ய கோரியிருந்தார்.
இதுபோன்ற ஒரு சிக்கலா சூழலில் தற்போது ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி அவரது மரணத்தை மேலும் மர்மமாக்கி உள்ளது.