சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி, போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினி, எல்லோர் மனதிலும் ஜெயலலிதா நினைவு இருக்கும் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர். அதைதொடர்ந்து, 77 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டி, நிர்வாகிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர் களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும், நலத்திட்ட உதவிகள், மருத்துவ உதவி, அன்னதானம் ஆகியவையும் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், போயஸ்கார்டனில் உள்ள மறைந்த ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலும், அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது புகைப்படம் மலர் மாலைகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு பல முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில்,. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற ஜெ., தீபா அழைப்பை ஏற்று வந்தேன். இங்கு நான் வந்தது இது நான்காம் முறை. 1977ல் அவரை பார்க்க முதல் முறையாக வந்திருந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக ஒரு திட்டம் இருந்தது. அப்போது அவர் பார்க்க விரும்புவதாக கூறினார். அப்போது வந்திருந்தேன்.
இரண்டாவது முறை ராகவேந்திரா திருமண மண்டபம் திறப்பு விழாவுக்கு அழைக்க வந்தேன். மூன்றாவது முறை எனது மகள் திருமணத்துக்கு அழைக்க வந்தேன். இது நான்காம் முறை. அவர் இங்கு இல்லை என்று சொன்னாலும் கூட, அவர் நினைவு எப்பொழுதும் எல்லோர் மனதிலும் இருக்கும். இங்கு வந்து அவர் வாழ்ந்த வீட்டில், அஞ்சலி செலுத்தி அவரது இனிப்பான, சுவையான நினைவுகளோடு செல்கிறேன். அவர் நாமம் வாழ்க.
இவ்வாறு கூறினார்.